Friday, May 8, 2009

ஈழத்தமிழர் வாழ்வில் காத்திரமிக்க தாக்குறவு செலுத்திய பேராசிரியர் சு.வித்தியானந்தன் (1924.05.08 -1989.01.21) தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டு இருபது வருடங்கள் கடந்து விட்டன. அவரது எண்பத்தைந்தாவது பிறந்த நாளில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்த்து அவர் ஏற்படுத்திய வகிபாகம் குறித்து ஒரு மறுமதிப்பீட்டினை மேற்கொள்வது அவசியமானதாகும்.மிகக் கனதியான பங்குப்பாத்திரம் வகித்த எந்தவொரு ஆளுமை மீதும் ஏற்படுகிற ஏற்றிப் போற்றுதலும், தூற்றுதலும் இனி அவசியமற்றது. இரு தசாப்தங்கள் கடந்த நிலையில் அன்றைய அரசியல் செல்நெறி குறித்த மறுமதிப்பீட்டுக்கான ஆரம்ப நிலை தோன்றிக் கொண்டிருக்கும் சூழலில் அவரது வகிபாகம் குறித்து மறுமதிப்பீடு மேற்கொள்வது சாத்தியமானதே. ஆயினும் இது முழுமையான மறுமதிப்பீட்டுக்களம் அல்ல என்பதும் கவனிப்புக்குரியது. அத்தகைய முயற்சிக்கான ஒரு முன்னோட்டச் சிறுகுறிப்பே இது. நண்பர்களாலும் அவரது மாணவர்களாலும் “”வித்தி’ என அன்புகலந்த மதிப்புணர்வோடு அழைக்கப்பட்ட பேராசிரியர்இ யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட தெல்லிப்பழையில் வழக்கறிஞரான சுப்பிரமணியத்தின் மகனாகப் பிறந்தார். தாயார் முத்தம்மா.வீமன்காமம் அவரை வளர்த்தெடுத்த கிராமம். மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் திருப்பணிஇ ஆடி அமாவாசையில் அன்னதானம் ஆகிய ஆன்மீக நாட்டத்தில் ஈடுபாடு கொண்ட அவரது குடும்ப முன்னோடிகள் ஆறுமுக நாவலர் செல்வாக்குக்குட்பட்டு கல்விக் கூடங்களையும் நிறுவியுள்ளார்கள்.
வீமன்காமம் தமிழ் பாடசாலை (வித்தியன் பேரன் சின்னத்தம்பியால் தொடங்கப்பட்டு தந்தையால் விருத்தி செய்யப்பட்ட பாடசாலை இது)இதெல்லிப்பழை யூனியன்கல்லூரிஇ பரி.யோவான் கல்லூரி, யாழ்.இந்துக்கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றுத்தேர்ந்தவர் வித்தி.இலங்கைப் பல்கலைக்கழக்தில் சுவாமி விபுலானந்த அடிகள், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை ஆகியோர் இவரது ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர். இங்கு தமிழ் சிறப்புப் பாடமாகக்கற்று கலைமாணி முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்ற முதலாமவர் வித்தி.இலண்டனில் கலாநிதிப்பட்டம் பெற்ற போது அவருக்கு 26 வயது பூர்த்தியாகியிருந்தது. அக்காலத்தில் இத்தனை இளம் வயதில் இவ்வாறு உயர் பட்டப்பேற்றினை எய்தியோர் விரல்விட்டு எண்ணத்தக்கோரே என்பது சொல்லித்தெரிய அவசியமில்லாதது.
இவ்வாறு உருவாகும் ஒருவர் வெறும் புத்தகப் பூச்சியாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம். தன்னைப்போன்ற புத்தகப் பூச்சிகளையே சமூகத்தில் பெரிதும் வளர்த்தெடுப்போராயும் விளங்குவர். மாறாகச் செயல்திறன் மிக்க மாணவர் பரம்பரையொன்று களப்பணிகள் வாயிலாகச் சமூக அசைவியக்கத்துக்குப் பங்காற்றி நிலைபேறான சாதனைகளை நிறைவாக்குவதற்கான அடிப்படைகளை விதைத்துச் சென்றவர் வித்தி. ஏனையவர்களை இயக்குபவராகவன்றி தானே முன்னோடிப் பாத்திரம் வகித்துச் செயற்பட்டார். கலாநிதிப் பட்டப் பேற்றுக்காக பதிற்றுப்பத்தை ஆய்வுப் பொருளாக எடுத்தவர் அதனை ஆங்கில வடிவில் முடங்கிப்போக விடாமல் இ “தமிழர் சால்பு’ எனும் தலை சிறந்த தமிழ் நூலாக மறுவரைவு செய்து தந்தார். தமிழர் வரலாற்றின் தொடக்க காலப் பண்பாட்டைத் தெளிவாக ஆய்வு செய்து வெளிப்படுத்திய அந்நூல் இன்று வரை ஆய்வுலகத்தால் பெரிதும் போற்றப்படுகிற ஒன்று. அவரது மாணவரான பேராசிரியர் க.கைலாசபதி தமிழர் வீரயுகத்தை மார்க்சிய ஒளியில் ஆழ்ந்து பார்ததுப் “பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ என்ற நூலைப்படைப்பதற்கு வித்தியின் “தமிழர் சால்பு’ பேருதவியாக அமைந்திருந்தது. இதனைப் “பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ நூலின் அடிக்குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய வித்தி தனது மாணவியாக அறிமுகமான நுணாவிலைச் சேர்ந்த செல்வி கமலாதேவி நாகலிங்கம் அவர்கள் மீது காதல் கொண்டு 1957 இல் மனைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், இரு மகள்கள் பிள்ளைகளாகக் கிடைக்கப்பெற்றனர். “பிள்ளைகளுக்குச் சூட்டும் பெயர்களிலிருந்து ஒரு குடும்பத்தினர் விழுமியங்கள் எத்தகையவை என்பதை ஓரளவுக்கேனும் விளங்கிக் கொள்ளலாம். அருள்நம்பி, மகிழ்நங்கை, அன்புச்செல்வி, இன்பச்செல்வன், சிவமைந்தன் என்று வித்தி குடும்பத்தினர் தம்பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டினர். அவர்களுடைய அன்புள்ளத்தையும் தமிழார்வத்தையும் சமயப்பற்றையும் பாரம்பரியப் பண்பாட்டுணர்வையும் காட்டுபவனாக அப்பெயர்கள் உள்ளன எனக்காட்டுவார் பேராசிரியர் சி.தில்லைநாதன். வித்தியின் மாணவராகவும் சக ஆசிரியராகவும் இருந்து குடும்ப உறவில் அந்நியோன்யமாகப் பழகிக் “கமலா அக்கா’ வின் அன்புள்ளத்தை அனுபவபூர்வமாய்க் கண்டதன் பேறாக வித்தியின் ஆளுமையோடு எப்போதும் அவரது மனைவியை இணைத்து ஓயாமல் பேசிவருபவர் பேராசிரியர் தில்லைநாதன். அத்தகைய உறவு பிணைப்புக் குறித்து தனிக் கலந்துரையாடலில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது. பொது வேலையாக எப்போதும் வெளியில் நடமாடும் வித்தியரை நாடிச் செல்கையில் ஒரு மடமாக அவரது வீடு திகழ்ந்து, கமலா அக்காவின் வரவேற்பையும் உபசாரத்தையும் பெற்றமை குறித்துப் பலரது எழுத்துகளிலிருந்தும் அறிய முடிகின்றது. அவர் நோயுற்று 1977 இல் மறைந்த போது வித்தியர் அடைந்த பாதிப்புகளையும் பலர் எழுதியுள்ளனர்.
அத்தகைய கட்டத்திலேயே அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகினார். தன்னால் இயன்றளவில் யாழ்ப்பாண வளாகமாக இருந்த ஒன்றிணை முழுமையான பல்கலைக்கழகம் ஆக்குவதற்கு அரும்பாடுபட்டு உழைத்தார். குறிப்பாக மருத்துவ பீடத்தை கட்டியெழுப்புகையில் துறைசார் பேராசிரியர்களை வரவழைப்பதிலிருந்து வளங்களை பெறுவதுவரை பெரும் சவால்களை முகங்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கின்றார். ஆயினும் இறுதிக்காலத்தில் அவரால் கட்டியெழுப்பப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தோடு முரணுறும் துயரையும் சந்தித்தார். அந்த மனச்சுமையோடு 1989 இல் அவர் மறைந்து விட்டபோதிலும் அவரது நினைவைப் பல்கலைக்கழகம் நன்றியுணர்வோடு பதிந்து வைத்து பெருமை கொள்ள மறந்துவிடவில்லை. மிகப் பெரும் பொக்கிஷமாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகம் “பேராசிரியர் சு.வித்தியானந்தன் நூலகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளமை பொருத்தப்பாடுமிக்க கைமாறு. இலங்கைத் தபால் திணைக்களம் 1997 நவம்பர் 11 அன்று வித்தியரின் முத்திரையை வெளியிட்டதன் வாயிலாக இலங்கைச் சமூகம் அவர் மீது கொண்ட மதிப்புணர்வையும் வெளிப்படுத்தியுள்ளது.
அவர் பெறும் கௌரவம் கல்விப்புலத்தைக் கடந்த வியாபிதங்களையுடையது. “தமிழர் சால்பு’ போல பின்னர் ஆய்வு நூல்களை அவர் எழுதவில்லை. பல்கலைக்கழக மாணவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக அவ்வவ்போது எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டுத் தனி நூல்களாயின. ஆழமிக்க ஆய்வு நூல்களாகத்தக்கன. பல்வேறு பணிகளால் அவ்வாறு ஆகாமல் கட்டுரை நூல்களுக்குள் அடங்கிப் போய்விட்டமை ஒருவகையில் தவிர்க்கவியலாததுதான். அப்படியும் நூலுருப் பெறாத கட்டுரைகள் இன்னும் அதிகமுள. இத்தகைய கட்டுரைகளைக் காணும் போது அவரது சமூக நோக்கு தெற்றேன விளக்கம் பெறக் காணலாம். இஸ்லாமிய தமிழ், கிறிஸ்தவ தமிழ் குறித்த அவருடைய பங்களிப்புகளில் அநேகமானவை முன்னோடி செயற்பாடுகளாகும். இவற்றினூடாக விரிந்தகன்ற தமிழ் தேசியக் களத்தைப் பண்பாட்டுத் தளத்தில் கண்டு காட்ட வித்தி முயன்றுள்ளார்.
அவரது ஆசிரியராகத் திகழ்ந்த விபுலானந்த அடிகள் முஸ்லிம்தமிழ் உறவை மிகவலுவாக வளர்க்கும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தவர். தேசிய விழிப்புணர்வை பாரதியை முன்னிறுத்தி மக்களிடையே வளர்க்கும் பணியையும் அடிகளார் முன்னெடுத்துள்ளார். வெறும் தேசியக் கவியாகப் பாரதியை அடையாளப்படுத்த முனைந்த அந்த காலத்திலேயே பாரதியின் ஆன்மீகக் கவிதையின் வீச்சை வெளிப்படுத்தியவர். இந்து மதத்தை விளக்கும் கட்டுரை ஒன்றில் பாரதி கவிதையை ஆதாரமாகக் காட்டியவர். ஆயினும் திராவிடயியக்க எழுச்சியின் பால் அடிகளார் கவனங்கொண்டதில்லை. வித்தியரிடம் விபுலானந்த அடிகளது ஆன்மீக நாட்டமோ அவர் நிலைப்பட தேசியமோ தாக்கம் செலுத்தியதைவிடவும் திராவிடரியக்கத்தாக்கமே முனைப்புற்றிருந்தது. அதன் பேறாகவே தமிழர் சால்பினை உணர்த்தும் ஆய்விலே ஆழக்கால் பதித்தார்.
அதன் தொடர்ச்சியாக ஈழத் தமிழ் தேசியத்தை வீறாந்த வகையில் முன்னெடுப்பவராக வித்தியர் வளர்ச்சியடையலானார். வெறும் பழைமையின் மீட்டுருவாக்கமாக இல்லாமல் ஈழத்தமிழ்த் தேசியத்தின் அடியாதரமாக அமையத்தக்க நாட்டார் இலக்கியத்தையும் கிராமியக் கலையையும் தேடித்தொகுத்துத் தேசிய பண்பு சார்ந்து வடிவப்படுத்தலானார். இந்த அம்சத்தில் அவருக்கு வழிகாட்டியவர் அவரது மற்றொரு ஆசிரியரான பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆவார். இந்தப் பணியே தனது அடிப்டை அம்சமாகக் கருதியதாற் போலும், வித்தியர் தன் குருவென விதந்து போற்றியது பேராசிரியர் கணபதிப்பிள்ளையையே. தனது குருவின் நாடகச் செயற்பாடுகளின் பரிணமிப்பாக நாட்டுக் கூத்துகளை நவீன வாழ்முறைக்கு உகந்த வகையில் நவீனப்படுத்தினார். அரங்காற்றுகை மட்டுமன்றிப் பல நாட்டுக்கூத்துப் பிரதிகளை அழிவிலிருந்து காத்து அச்சேற்றினார். இவையும் அவர் தொகுத்து வெளியிட்ட நாட்டார் பாடல்களும் ஈழத்தமிழ் தேசியக்கலை இலக்கியத்திற்கான அடிப்படையாகத் திகழ்வன. ஈழத் தமிழ் தேசியம் தனக்குள் முரணுற்று அதிகாரத்தரப்புச் சார்ந்து வெறும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பு என்பதை மட்டும் இலட்சியமாக்கிய போது யாழ்ப்பாணத்தில் பண்ணையடிமைத் தனத்தைத் தகர்க்கும் இலங்கை தேசியம் சார்ந்த சாதியத் தகர்ப்புப் போராட்டம் முனைப்புற்றிருந்தது. அடிமைத்தனத்தைத் தகர்க்கும் பரந்து பட்ட இலட்சியம் அதற்குரியதாக அமைந்ததனால் சர்வதேச நோக்கோடு அகில இலங்கை சார்ந்த ஐக்கியப்படத்தக்க சக்திகள் அனைத்தையும் அந்த அணி ஒருமுகப்படுத்தியிருந்தது. தன்னளவில் சாதியத் தகர்ப்பு இலட்சியத்தை உடையவராகத் திகழ்ந்த வித்தியர் இத்தகைய இடதுசாரிப் பண்பையே அதிகம் வெளிப்படுத்தியிருக்க வேண்டியவர். தான் வரித்துக் கொண்ட தமிழ் தேசியம் தனது விருப்பை மீறி அதிகாரத் தரப்புத் தேசியமாய்க் குறுகியுள்ளதை அவரால் அவதானிக்க முடிந்தும் அதை நேர்ப்படுத்தும் முயற்சியெதனையும் முன்னெடுக்க வாய்ப்புகள் சாதகமாக அமையவில்லை.
ஈழத் தமிழ்த் தேசியம் என்றாலே ஏகாதிபத்திய சார்பானது எனும் பார்வை இடதுசாரிச் செயற்பாட்டாளர்களிடம் இருப்பதுண்டு. தேசிய முதலாளித்துவ அரசாங்கங்கள் அவ்வவ்போது முன்னெடுத்த தேசிய மயப்படுத்தலை எதிர்த்தது தொடர்பாக இந்த நோக்கு வலுப்பட்டிருந்தது. இருப்பினும் பல தமிழ்த் தேசியர்கள் ஏகாதிபத்திய எதிர்புணர்வுடன் மக்கள் விடுதலை சார்ந்த பண்புகளைத் தமது பண்பாட்டு வெளிப்பாடுகளில் படைப்பாக்கித் தந்திருக்கின்றார்கள். அத்தகைய மக்கள் நலன் சார்ந்த கலை இலக்கிய செல்நெறிக்கான படைப்பூக்கத்தை ஆதரித்து வளர்ப்பவராக வித்தியர் திகழ்ந்துள்ளார். தமிழ்த் தேசியத்துக்குள் ஏகாதிபத்திய அடிவருடித்தனம் வளரத்தக்க வகையில் அது அதிகாரத் தரப்பினர் சார்பாக மாறமுடிந்துள்ளது. அதேவேளை, அதனுள் சாதியத்தகர்ப்பையும் விஞ்ஞான நோக்கையும் தக்க வைத்துக்கொண்ட இடதுசாரித் தரப்பும் செயற்பட்டுள்ளது.
இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து ஈழத்தமிழுக்கு வாய்த்த ஒரு பேறு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூறில் டொக்டர் கிறீன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இரசாயன மனித உடற் கூறியல் மற்றும் விஞ்ஞான நூல்கள் தமிழில் படைக்கப்பெற்றிருந்தன. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அகராதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தன. அவற்றின் பரிணமிப்பாக சேர்.பொன்.அருணாசலம்இ ஹன்டி பேரின்பநாயகம் போன்றோர் இடதுசாரித் தமிழ்த் தேசியத்தைத் தலைமைதாங்கி நடத்தியுள்ளார்கள். உண்மையில் ஏகாதிபத்திய சார்பு இனத்தேசியம் குறுகிய கால வரலாறுடையது யாழ்ப்பாணத்துக்கும் கூட இடதுசாரித் தமிழ்த் தேசியம் வலுவாக நீண்ட வரலாறுடையதாய் இருந்துள்ளது. அதன் ஆளுமைமிக்க பிரதிநிதியாக வித்தியர் விளங்கியுள்ளார்.
இனியும் இடதுசாரிச் செல்நெறி தமிழ் தேசிய இயக்கம் என்பவற்றை எதிரெதிர் அணிகளாக்கிப் பேதம் வளர்க்காமல்இ வித்தியர் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசியத்தின் இடதுசாரிப் போக்குச் சார்ந்து எமது வரலாற்றை மறுமதிப்பீட்டுக்கு உள்ளாக்குவோம். அதன் ஒளியில் வித்தியரது மகத்தான பங்களிப்புகள் குறித்த ஒரு தெளிவான வரையறையைக் கண்டு தெளிவோம்

No comments:

Post a Comment