Friday, February 6, 2009

ஈழத்து கூத்து மீட்டுருவாக்க முன்னோடிகள் வரிசை


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப் பீடாதிபதி பாலசுகுமாரின் பகிர்வு1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை நான் என்னுடைய பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டபோது அவர் என்னுடைய ஆசானாக இருந்தார். அவருக்கு கீழ் நான் படித்ததையிட்டு பெருமைப்படுகின்றேன். அவர் எங்களுக்கு பல விஷயங்களை அந்தக் காலகட்டத்திலே அந்த நான்கு வருடங்கள் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. நான் தமிழை சிறப்பு பாடமாகப் படித்த பொழுது நான்கு வருசமும் அவர் எனக்கு விரிவுரையாளராக,ஆசானாக இருந்திருக்கின்றார். இந்த நான்கு வருசங்களிலே தமிழ் பற்றியதான ஒரு ஆழமான தேடுதலை மேற்கொள்வதற்கு ஒரு ஊக்கசக்தியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இருந்திருக்கின்றார்.நான் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்திலே படிக்கின்றபொழுது வாசி, வாசி என்று என்னை வாசிப்பதற்கு தூண்டியவர் அவர். நான் லைபிரரியிலே போய் லைபிரரியின் கடைசி மணி அடிக்கும் வரை இருந்து வாசிப்பேன். அந்தக் காலகட்டத்தில் தான் நான் முற்று முழுதாக தமிழ் நாவல் இலக்கியம் என்பது ஒரு தனிப்பாடமாக இருந்தது. அந்தப் பாடத்தை அவர் தனியாகவே எனக்கு அவர் படிப்பித்தார். அதேபோல சங்ககால அகத்திணை மரபை நான் தனியே அவரிடம் படித்தேன். அதோடு சேர்த்து தொல்காப்பியத்தின் அகத்திணை மரபு, நாடகமும் அரங்கியலும் எனக்கு சிறப்பாகப் படிப்பிக்கப்பட்ட பாடம். இதோடு சேர்ந்து பொதுவாக மற்றமாணவர்களோடு சேர்ந்து தமிழ் சிறப்புப் பாடத்திலே பல விசயங்களை நான் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். குறிப்பாகச் சொல்லப்போனால் அவருடைய படிப்பித்தல் என்பது விரிவுரைகள் மிக ஆழமானதாக இருக்கும்.சிலபேருடைய விரிவுரைகளைக் கேட்கும் போது எப்போது அவை முடியும் என்று நாங்கள் நினைப்பதுண்டு.ஆனால் அவருடைய விரிவுரைகள் அப்படியல்ல.சலிக்காமல் அலுக்காமல் எத்தனை மணித்தியாலமும் கேட்கக் கூடியதாக, நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக அந்த விரிவுரைகள் அமைந்திருக்கும். நான் தனியே அவரிடம் படித்தபோது சிலவேளைகளில் அவர் பன்னிரண்டு மணிக்கு விரிவுரையைத் தொடங்கினால் கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலங்கள், ஐந்து மணித்தியாலங்கள் அந்த விரிவுரைகள் நீண்டு கொண்டே போகும். அந்த விரிவுரைகள் நடத்தப்படுகின்ற பொழுது அது ஒரு விரிவுரையாக இல்லாமல் ஒரு பகிர்தலாக, ஒரு உரையாடலாகவே அது அமைந்திருக்கும். அப்போது தான் பல விஷயங்களை, சிலவேளைகளில் பாடத்துக்கு அப்பாலும் கூட கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. தனியே அந்தப் பாடப் பரப்போடு மாத்திரம் நில்லாமல் அந்தப் பாடத்தோடு தொடர்புடைய பல விஷயங்களை உலகளாவித் தழுவி வருகின்ற போது பரந்த அறிவைத் தரக்கூடியதாக அவருடைய விரிவுரைகள் அமைந்திருந்தன.குறிப்பாக இன்னும் நான் சொல்லப் போனால் நான் அவரிடம் சிறப்பாகப் பயின்ற பாடங்கள் என்று சொல்லுகின்ற பொழுது நாடகமும் அரங்கியலும் என்ற பாடம். இந்த நாடகமும் அரங்கியலும் என்ற பாடம் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்துக்கு ஒரு தனிப்பாடமாக இருக்கவில்லை. அத்தோடு க.பொ.த உயர்தரத்திலும் கூட தனி ஒரு பாடமாக இருக்கவில்லை. அதன் பிற்பாடுதான் 1980 களுக்கு பின்னர் தான் தனி ஒரு பாடமாக க.பொ.த உயர்தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல பல்கலைக் கழகத்திலே தமிழ் மொழி மூலமாக இந்தப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடத்தை க.பொ.த உயர்தரவகுப்பில் அறிமுகப்படுத்தியதில் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கு மிக முக்கியமானது.தமிழ் கலை இலக்கியப்பரப்பிலே அவருடைய இடம் மிகப் பெரிய இடம். அதை யாரும் மறுக்க முடியாது. பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட அதையெல்லாம் தாண்டி, அவற்றுக்கெல்லாம் அப்பால் ஒரு மிகப்பெரிய மலையாக தமிழ் கலை இலக்கியப் உலகிலே அவர் இயங்கியிருக்கிறார். அப்படிப் பார்க்கின்ற பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கூடாக அவர் ஆற்றிய பணிகளும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு காலகட்டத்திலே மிகப்பெரிய சக்தியாக வளர்வதற்கான பல விஷயங்கள் இவரூடாகவே வெளிப்பட்டது.அத்தோடு தமிழ் நாடக ஆராய்ச்சி என்று பார்க்கின்ற பொழுது, தமிழ் நாடகம் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் தொடக்கிவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என்று சொல்லலாம். சுவாமி விபுலானந்தர் ஆரம்பத்திலே தமிழ் நாடகங்கள் பற்றி விசயங்களை மதங்க சூளாமணி மூலமாகக் குறிப்பிட்டாலும் அதைத் தொடர்ந்து நாங்கள் பார்க்கின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அது இப்போது தமிழில் வந்திருக்கின்றது, "பண்டைத் தமிழ் சமூகத்தில் நாடகம்" சென்ற ஆண்டு என்று நினைக்கின்றேன், அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. அவர் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்திலே கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்டார். தமிழ் நாடகத்தையும் கிரேக்க நாடகத்தையும் ஒப்பு நோக்கி பண்டைத் தமிழ்ச் சமூகத்திலே இந்த நாடக மரபுகளை சிலப்பதிகாரத்தினூடு அவர் வெளிப்படுத்திய விதம் மிக முக்கியமானது. இன்றைக்கு கூத்துப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக கிழக்கு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் நாட்டிலே பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இவற்றுக்கெல்லாம் வழிகாட்டியாக, சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அடிப்படையாக அமைகின்றது. இந்த ஆய்வின் பின்புலம் தான் பலரை தமிழ் நாடகம் பால் இழுக்கச் செய்தது.பிற்காலத்திலே நீங்கள் பார்த்தீர்களேயானால் தமிழ் நாட்டிலே சக்தி பெருமாள், ஏ,என் பெருமாள் போன்ற பலர் இத்தகைய தமிழ் நாடக ஆய்விலே ஈடுபடுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக பேராசிரியர் சிவத்தம்பியத் தான் தமிழ் நாடக ஆராய்ச்சியில் முக்கியமானவராகக் கருத முடியும். அதே போல அவர் இலங்கை கலைக்கழகத்திலே பணியாற்றிய பொழுது, ஈழத்து நாட்டாரியர் குறித்த அவரது ஈடுபாடு மிக முக்கியமானது. குறிப்பாக அவர் முல்லைத்தீவிலே செய்த நாட்டாரியல் விழா, இன்றைக்கும் பலர் நினைவு கூர்ந்து பேசக்கூடிய நிகழ்வாக இருக்கின்றது. இதை விட அவர் பேராசிரியர் வித்தியானந்தனோடு பணியாற்றிய போது, பேராசிரியர் வித்தியானந்தன் கூத்து மீள் கண்டுபிடிப்பு செயத போது அதாவது ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரங்க வடிவம் பற்றி சிந்தித்த பொழுது கிழக்கிலங்கையிலே பிரபல்யம் பெற்ற தென்மோடி வடமோடி நாடகங்களை அவர் மீளுருவாக்கம் செய்து மேடையேற்றினார் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் இவற்றை மேடையேற்றியபோது அதற்குப் பக்கத்துணையாக இருந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும், பேராசிரியர் கைலாசபதியும். அந்தக் காலத்திலே செய்யப்பட்ட கர்ணன் போர், நொண்டி நாடகம், வாலி வதை, இராவணேசன் போன்ற நாடகங்கள் மிக முக்கியமான நாடகங்கள். ஆகவே இன்றைக்கு நாங்கள் பேசுகின்றோமே ஈழத்து தமிழர்களுக்கான அரங்க வடிவம், ஈழத்து தமிழர்களுக்கான நடனவடிவம், ஈழத்துத் தமிழர்களுக்கான இசை வடிவம் என்று பேசுகின்ற பொழுது அதற்கான அடிப்படைகளை இத்தகைய கூத்து மீள் கண்டுபிடிப்பு என்கிற அந்த விசயத்திலிருந்து தான் தொடங்குகின்றது. ஆகவே அதற்கும் கூட அந்தக் காலத்தில் மிகக் காத்திரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.இன்றைக்கு தமிழ் நாட்டில் கூட நாடகமும் அரங்கியலும் என்ற கற்கை பிளஸ்டு வில் இல்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற தமிழகத்திலே பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், தஞ்சைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் தான் தமிழிலே நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதே போல் இந்தியா முழுவதிலும் எடுத்துக் கொண்டாலும் ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரம் தான். ஆனால் சிறிய ஒரு நாடான நம் நாட்டில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதன் மூலமாக பல கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் சிங்களத்தில் நாடகமும் அரங்கியலும் பல்கலைக்கழகத்திலே ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்த வகையில் பார்க்கின்ற பொழுது ஈழத்திலே நாடகம் தொடர்ப்பான விஷயங்களிலே, ஆராய்ய்சிகளிலே, படிப்புக்களிலே பேராசிரியர் சிவத்தம்பியின் இடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.கிழக்குப் பல்கலைக் கழகத்திலே அவர் வந்து பணியாற்றிய காலத்தை நான் இங்கு குறிப்பிடவேண்டும். கிழக்குப் பல்கலைக்கழகத்திலே அவர் 2 வருடங்கள் பணியாற்றியிருந்தார். அவர் பணியாற்றிய காலங்களிலே கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முக்கியமான பட விஷயங்களைத் தொடங்குவதற்கு அவர் காரணகர்த்தாவாக இருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.குறிப்பாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள், குறிப்பாக கலைமாணி, முதுமாணி, முதுதத்துவமாணி , தத்துவமாணி அதாவது எம்.ஏ.எம்.பிஎல், பி.எச்.டி ஆகிய கற்கைநெறிகளைத் தொடங்குவதற்கான பாடத்திட்ட வரைபை பேராசியர் சிவத்தம்பி அவர்கள் இருந்து அந்தப் பணியைச் செய்தார்கள். அவரோடு சேர்ந்து பேராசிரியர் மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு போன்றவர்களும் இணைந்து அந்த வேலகளை செய்தார்கள். ஆனால் அதற்கான திட்டவரைபை உருவாக்குவதற்கு சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக இருந்தார்.அதுமாத்திரமல்லாமல் அந்த உயர்பட்டப்படிப்புக்களை நடாத்துவதற்கான விரிவுரைகளைக்கூடப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்தார்கள். அந்தவகையிலே நாடகமும் அரங்கியலும், நுண்கலை ஆகிய பாடங்களிலே இன்றைக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முதுமாணி, முதுதத்துவமாணி, தத்துவமாணி ஆகிய துறைகளைச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் அங்கே இருக்கின்றன. அந்த வகையிலேஅவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே முக்கியமான காரியத்தைச் செய்வதற்குக் காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றார்.அதாவது நான் அவருடைய மாணவனாக இருந்தது ஒரு பக்கம், பின்னர் அவரோடு இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது இரண்டாவது கட்டம்.அடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தோடு சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரியை இணைக்கின்ற முயற்சியிலே திட்ட முன்வரைபு ஒன்று அதற்குத் தேவைப்பட்டது. அந்தத் திட்டமுன்வரைபைத் தயாரிப்பதற்கு பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மிக முக்கியமானவராக இருந்தார். பலரும் அதனோடு இணைந்து பணியாற்றினாலும் கூட, சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக நின்று செயற்பட்டார்.மூன்றாவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எங்களுடைய சிறப்பு மாணவர்களுக்கு, தமிழ் சிறப்பு மாணவர்கள், நுண்கலை சிறப்பு மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் படிக்கின்ற சிறப்பு மாணவர்களுக்கு அவர் விரிவுரைகளை நிகழ்த்தினார். இவ்வாறு மூன்று வகையான பணிகளை அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே இரண்டு வருடங்கள் பணியாற்றிய போது செய்ததை நாங்கள் அதை மிகப் பெருமையாகக் கருதுகின்றோம். பின்னாளிலே நான் பீடாதிபதியாக வந்த பொழுது பல விசயங்களை நான் கேட்டு தெரிந்து கொள்ள அவருடைய ஆலோசனைகள் மிகுந்த வழிகாட்டியாக அமைந்தன.அதாவது சில ஆராய்ச்சி முயற்சிகளைச் செய்வதற்கும், சில கருத்தரங்குகளை நிகழ்த்துவதற்கும், ஆகவே ஒரு academic என்ற வகையிலே ஒரு கல்விசார் பேராசிரியர் என்ற வகையிலே, ஒரு பல்கலைக்கழக புத்திஜீவி என்ற வகையிலே கிழக்குப் பல்கலைக்கழகத்தோடு அவருக்கிருந்த தொடர்பு என்பது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தை மேலும் ஆளுமை உள்ளதாக, ஆளுமை உள்ள பட்டதாரிகளை உருவாக்குவதற்குரிய ஒரு பின்புலத்தை அவர் எங்களுக்கு அளித்தார். கூடவே அவரால் வரமுடியாத காலகட்டத்தில் நாங்கள் எங்கள் மாணவர்களை கொழும்புக்கு அனுப்பி அவரிடம் கற்கை பெறுவதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தோம். இப்படி கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்புகள் முக்கியமானவை. அதை விட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உலக நாடகவிழா நடைபெற்ற பொழுது அவர் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றார். இப்படியாக கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்பு இன்று வரை தொடர்கின்ற உறவாகவே இருந்து வருகின்றது.

No comments:

Post a Comment